படம் பார்த்துவிட்டு வந்தவுடன் அதே மனநிலையுடன் எழுதும் பதிவு இது..!
பெனாத்தலார் இதை விரிவாக அலசி விட்டாலும் அதன் ஈரம் காயும் முன் வரும் படத்தை பற்றிய ஒரு விமர்சனம்...!
இதுவரை குழந்தைகளுக்கு பயம் என்பதை அடுத்த வீட்டு மீசை அங்கிளை காட்டி சாப்பாடு ஊட்டுவதும், பேய் பயம் காட்டி தூங்க வைப்பதும் என்றுதான் நினைத்திருந்தேன். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத குழந்தைகளை அவர்களின் எதிர்காலம் என்ற ஒற்றைசொல்லிற்காக அடித்து அனுப்பியவர்க்கும் இந்த படம் சரியான பாடமாக அமைகின்றது...!
எளிமையாக ஆரம்பிக்கிறது கதை. எல்லா பாடத்திலும் பெயிலாகும் தம்பி, எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கும் அண்ணன்... இரு குழந்தை வளர்ப்பிலும் வேறுபாடு காண முடியாத பெற்றோர். சிறியவனின் பாடத்தின் மேல் கவனமில்லா தன்மைக்கு காரணம் தேட இயலாமல் அவனையே காரணமாக்கி கண்டிப்பான ஹாஸ்டலில் சேர்க்கின்றனர். அதன் காரணத்தை அந்த பள்ளிக்கு வரும் தற்காலிக ஓவிய ஆசிரியரான அமீர்கான் கண்டறிந்து அவனைப்பற்றி அவனுக்கும், மற்றவர்க்கும் காட்டி ஜெயிக்க வைப்பதே கதை.
குழந்தைகள் யாரிடமாவது கண்டிப்புடன் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் கெட்டுவிடுவார்கள் என்று நினைவில் மண்ணள்ளி போட்டு மூடி வைக்கிறது. குழந்தைகளது எதிர்காலத்தை பற்றிய அச்சத்தை குழந்தைகளின் மேல் திணிக்க முயலும் அத்தனை பேரையும் செருப்பால் அடித்ததைப்போன்ற உணர்வு. சரியா படிக்காட்டி மூட்டைதான் தூக்கணும். பெயிலானா மாடு மேய்க்கத்தான் போகனும் என்ற வசவுகளை குழந்தைகள் மேல் திணிக்கும்போது அவர்களின் கற்பனை எங்கு சென்றிருக்கும்.. படத்தில் சிறுவனின் மேல் ஏறும் கணித பூச்சிகளும் ஆங்கில பூச்சிகளும் நம்மையும் சேர்த்து பயப்பட வைக்கின்றன. அவன் ஒரு பூச்சியை அடித்து கொல்லும்போது அந்த இடத்தில் சந்தோஷம் வருகிறது. ஆனால் அதன் பிறகு...!
தங்களின் அச்சங்களை சரிவர சொல்லத்தெரியாத பிஞ்சுகளின் மீது தமது கற்பனை சுமைகளை ஏற்றி வைக்கும் பெற்றோர்கள்.. ப்ளீஸ் கண்டிப்பாக இந்த படத்தை பார்த்துடுங்க.. மொழி புரிவதில் நேரும் சிக்கல்கள் என்பதில் கடினமிருப்பதாக எனக்கு தோணவில்லை. ஏனெனில் எல்லா வர்க்கத்துக்கும் குழந்தைகளை பற்றிய படத்தின் மொழி நன்றாக புரியும் வகையில் தெளிவாக இருக்கின்றது.
படத்தின் சிறுவனி(ரி)ன் நடிப்பு அபாரம் என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது. சில குப்பைகளுக்கு நடுவில் ஒரு பெரிய வைரம் சிறுவனி(ரி)ன் ரூபத்தில் ஜொலிக்கின்றது. காற்றடிக்கும் வேகத்தில் குப்பைகள் மலையின் மீது அமர்ந்திருக்கலாம். ஆனாலும் இந்த வைரம் ஒரு நாள் கிரீடத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
அமீர்கானின் தைரியத்திற்கு ஒரு ராயல் சல்யூட். குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்றில்லாமல் குழந்தைகளுக்காக பெற்றோர் காண வேண்டிய படம் என்று அடித்து சொல்ல வைத்திருக்கிறார். உண்மை சுடும் என தெரிந்தும் தைரியமாக எல்லோருக்கும் சூடு வைத்திருக்கும் கான் கலக்கல்தான். லகானின் கமர்ஷியல் வெற்றியில் கொஞ்சமும் பங்கு போடாமல் மிகச்சிறப்பான முயற்சியில் ஜெயித்து நிற்கின்றார் ஒரு இயக்குநராகவும்..!
படத்தில் ஊனமுற்ற நண்பனாக வருபவரும், அண்ணனாக வருபவரும் சிறந்த தேர்வு.. எந்த காட்சியையும் வீணாக்காமல் நம்மையும் மகிழ்ச்சியூட்டி பயமுறுத்தி விளையாடியிருக்கிறது படத்தின் பிண்ணனி இசை. அமீர்கானைத்தவிர தெரிந்த முகங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் அத்தனை கதாபாத்திரங்களையும் எங்கேயோ கண்ட முகமாக தோண வைக்கின்றது திரைக்கதை. அதிலும் அந்த இறுதிகாட்சி.. சிறுவன் ஓவிய போட்டியில் வரைந்து விட்டு அதை அமீர்கானிடம் காட்ட வருவதும், அமீர்கான் என்ன வரைந்தார் என்று பார்த்துவிட்டு கண்கலங்குவதும் வர்ணிக்க வார்த்தைகள் போதாது..
படத்தின் இடையே வருகிற பாடல்களில் சிறுவனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு பெற்றோர் திரும்பும்போது வருகிற பாடல் முக்கியமான ஒன்று. இந்த பாடலின் சாயலில் நம் பதிவர் ஒருவர் ஏற்கனவே பதிவாக்கியிருப்பது சந்தோஷமான ஒன்று.. அந்த கவிதை வரிகள்..
தேன் என்றால் தண்ணீ,
மம் என்றால் சாப்பாடு ,
இத்தனை பெரிதாகியும்
இது அறியாத தீதீ(அக்கா)
மேக்கு என்றால் எனக்கு ,
ஸார் என்றால் ஸ்டார்,
ஊன் என்றால் மூன்,
இது தெரியாத மேம்.
ஒன்றும் தெரியாதவங்களுக்கு
மத்தியில் நான்.
அம்மா நீ எங்கே?
அந்த பதிவர் இவர்தான்..
கவிதையை பதிவுல தேடாதீங்க.. பின்னூட்டத்தில் பாருங்க..
ஆனாலும் படம் பார்த்தபின் எழுந்த இரு உறுத்தல்களில் ஒன்று கோபி எழுப்பி வைத்தது. நல்லபடம் யார் நடித்தாலும் ஜெயிக்கும் என்பது என் வாதம். ஆனால் அமீர்கானின் படம் என்பதாலேயே இலவச விளம்பரத்தில் படம் ஜெயிக்கிறது என்பது அவன் வாதம்.
இரண்டாவது.. தன் பையன் சரிவர படிக்க மாட்டேன் என்கிறான் இது அந்த வியாதிதான் போல என்று நினைத்து மனநல மருத்துவரிடம் எந்த பெற்றோரும் முன் அனுமதி வாங்கிவிடுவார்களோ என்றுதான்..!
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)




13 comments:
படத்திற்கு விமரிசனம் எழுதி எங்களையும் நல்ல படம் பார்க்க தூண்டிய பினாத்தலாருக்கும், தம்பி.கதிர்க்கும் நன்றிகள் :))
\\படத்திற்கு விமரிசனம் எழுதி எங்களையும் நல்ல படம் பார்க்க தூண்டிய பினாத்தலாருக்கும், தம்பி.கதிர்க்கும் நன்றிகள் :))\\
அண்ணாச்சி, அய்ஸ், குசும்பன்...இவர்களுக்கும் நன்றிகள் ;)
இது மாதிரி awareness எத்தனை பேருக்கு இருக்குது? தெரியல.
எனக்கு வேற விதமான பயம் ... என்னன்னா நல்லா படிக்கக்கூடிய பிள்ளைங்க கூட ஒழுங்கா கவனமா முயற்சி எடுத்து படிக்காம .... அம்மா அப்பா திட்டக்கூடாது என் இஷ்டம் எனக்கு இவ்வளவு தான் வரும்ன்னு .. யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்களோன்னு ...
அருமையான படம்..நேற்றுதான் பார்த்தேன்..உங்கள் பயம் உண்மைதான்...மன நல மருத்துவர் தேடிப் போகும் பெற்றோர்கள்
ஒன்றிரண்டு பேராவது இருக்கத்தான் செய்வார்கள்...
//இது அந்த வியாதிதான் போல //
இது வியாதியா என்ன? இங்கே ப்ரைமரி ஸ்கூலில் டீச்சர்களே கண்டுபிடிச்சுச் சொல்லிடறாங்க இதையெல்லாம். அதுக்காக பள்ளிக்கூடத்தைவிட்டுத் துரத்தறது இல்லை. அதுவும் முடியாது.
நிறைய வாலண்டியர்ஸ் ஒன் டு ஒன் என்று பள்ளிநேரம் முடிஞ்சதும் உதவி செய்றாங்க.
நண்பரின் பையன், இப்ப நல்லவிதமாப் படிச்சு, மேற்படிப்புக்குக் கல்லூரியில் சேர்ந்திருக்கான்.
நான் இந்தப் படம் நேத்துதான் பார்த்தேன்.
ஏன் இல்லாமல்?? என் தம்பி தன் 5 வயது பெண்ணுடன் 4 நாட்களாக மருத்துவர் வீட்டு வாசலில் நிர்க்கிறான். வரிசையாக டெஸ்ட். தலை எழுத்து.
//Srividhya Sudhakaran said...
ஏன் இல்லாமல்?? என் தம்பி தன் 5 வயது பெண்ணுடன் 4 நாட்களாக மருத்துவர் வீட்டு வாசலில் நிர்க்கிறான். வரிசையாக டெஸ்ட். தலை எழுத்து.//
:(((
@கோபிநாத்...
தேங்க்ஸ் எல்லோருக்கும் தான். ஸ்பெஷல் தேங்க்ஸ் உனக்கும் :))
=================================
@காட்டாறு
அவேர்னஸ் பத்தி தெரிஞ்சுக்காட்டியும் பசங்க மேல நம்ம கனவுகளை ஏத்தி வைக்காம இருக்கறதே சிறந்ததுன்னு நான் நினைக்கறேன்.
============================
@ முத்துலட்சுமி
:))))
===============================
@ பாசமலர்
உண்மைதான் அக்கா.... :((
==============================
@ துளசி கோபால்
இந்த படம் தெரியாதவங்களுக்கான சிறந்த பாடமாத்தான் நான் நெனைக்குறேன் :))
=============================
நடுநிலையான விமர்சனம். பாராட்டுக்கள்
மொழி புரியலேன்னாலும், முழுசா உக்காந்து பாத்த படம். இதை நோய் ன்னு சொல்றதவிட குறைபாடுன்னு சொல்லலாமா?
இதே குறைபாடு மாதிரி ஆட்டிசம் (autism) என்கிற குறைபாடும் இப்போ அமெரிக்காவில் அதிகமா (குறிப்பா இந்திய ஆண் குழந்தைகளிடையே) ஆகிகிட்டு வருது. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தேவை ..... நிறைய்ய்ய பொறுமை!
@ மருதநாயகம்...
வருகைக்கு நன்றி மருதநாயகம் சார்...
=================================
@தஞ்சாவூரான்....
//மொழி புரியலேன்னாலும், முழுசா உக்காந்து பாத்த படம். இதை நோய் ன்னு சொல்றதவிட குறைபாடுன்னு சொல்லலாமா?
இதே குறைபாடு மாதிரி ஆட்டிசம் (autism) என்கிற குறைபாடும் இப்போ அமெரிக்காவில் அதிகமா (குறிப்பா இந்திய ஆண் குழந்தைகளிடையே) ஆகிகிட்டு வருது. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தேவை ..... நிறைய்ய்ய பொறுமை!//
உண்மைதான் தஞ்சாவூரான். ஆனாலும் தற்போது ஆட்டிசத்தை பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே பரவலாக காணப்படுவது சற்று நிம்மதியளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
Post a Comment