Friday, August 07, 2009

யாமம் - விமர்சனம்


இரவு கரும்பசுமை அதிகம் கொண்டிருக்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற ஒரு பெரிய விரிந்தவெளி. பகல்களின் செயல்கள் இரவுகளில் கனவுகளாக விதைக்கப்பட்டு முளைக்கிறது. அவள்’களின் சிரிப்பு, கோபம், முறைப்பு, சுளிப்பு, பேச்சுக்கு ஏற்றாற்போல் கனவு விளைகிறது. கனவுகள் பட்டுப்போகவும் துளிர்விடுவதற்குமாக மற்ற ஏதோவொரு பகல்கள் உதவுகின்றன. இரவு கனவுகளையும் விருப்பங்களையும் இச்சைகளையும் அதிகம் சுரந்து கொண்டே இருக்கின்ற அபூர்வ சுரபியாக இருக்கிறது. கனவுகளைப் பற்றி அறியா வயதில் மறுநாளைய பகலில் முந்தினம் கிடைத்த கனவுகளைப் பகிருதலில் அதிகம் கதைகள் கலந்திருந்தது. அதிகம் விலங்குகளை பழக்குபவனாக கிடைத்த கனவுகளின் பலனைப்பற்றிய தேடுதல் இருந்ததில்லை. பதின்ம வயதுகள் நிச்சயம் கனவு வருமென்றும் கனவில் அவள் அல்லது அவள்கள் இருக்க வேண்டுமென்பதையும் விதியாக்கிக்கொண்டன. உறங்குவதற்கு முன் இவள் கனவில் வருவாள் என்று நிச்சயப்படுத்திக்கொண்டு போர்வை இழுத்து மூடிக்கொள்ளுதலில் பலன் கிட்டியிருந்தது. இரவுகளில் வரும் கனவிற்கும் பகலின் நிகழ்விற்கும் என்னிடம் ஒரே ஒரு வித்தியாசம்தான். இரவுகளில் நான் நானாக இருந்திருக்கிறேன். பகல்களில் நான் என்னை மாற்றி முகமூடிகளுக்குள் பூட்டிக்கொள்கிறேன். இன்றுவரை ஏதாவது கனவுகளில் திடுக்கிட்டு எழச்செய்யும் இரவுகளைத்தவிர மற்ற எல்லா தினங்களிலும் எவளோ ஒருத்தி வந்து தொலைந்து கொண்டே இருக்கின்றாள். எவளுமில்லாத கனவுகளும் நினைவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது.

-சென்ஷி


நெடுங்குருதியில் உடலின் எல்லா அங்குலத்திலும் வெயிலை பரவவிட்டுச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், யாமத்தில் அலையவிட்டிருப்பது இருளை. இரவை. கருமையை மற்றும் சில மனிதர்களை. இம்மனிதர்கள் அனைவரும் இறந்த கால சரித்திரத்தில் அறியப்படாத அல்லது பாடப்படாத கதாபாத்திர தன்மையை கொண்டிருக்கிறார்கள். தியாகம் அல்லது துரோகம் என்பதன் அர்த்தம் தெரியாத மாயவலையில் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொண்டு தன்னைத் தானுண்ணும் விலங்கு ஆகிறார்கள்.

அப்துல் கரீமின் கனவில் தோன்றும் அல் அசர் முசாபர் என்னும் பக்கீரின் அசரீரியிலிருந்து தொடங்கும் கதை வெள்ளையர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தம் வந்து பாரதத்தின் பிரஜாதிபதியாகிய சூழலின் நிகழ் புனைவுகளை தக்ளி நூலாக தனக்குள் செலுத்திக் கொள்கிறது. வெள்ளையர் வருகையால் உருவான பட்டணத்தில் வாழ்ந்த சிலரின் கதை.

வாசனையைப்போன்று காமமும் அரூபம் தான். சின்ன சிலிர்ப்புகளால் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வதை காமத்தின் பங்கிற்கு நறுமணம் முக்கியமானது. நூலின் பெயர் யாமம் என்று வைத்தது இரவின் மடியில் எனக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. யாமம் என்பது நாவலில் மிகமுக்கியமான அரிதான வாசனைப்பொருளான அத்தரின் பெயராகக் குறிப்பிடப்படுகிறது. காமத்தின் வாசனையில் யாமத்திற்கும் முக்கியப்பங்கிருக்கிறது போல.

யாமம் எனப்படும் வாசனைமிக்க நறுமணப்பொருளான அத்தர் தயாரிப்பதை தனது குடும்பத்தொழிலாகக் கொண்ட அப்துல் கரீமிற்கு முதலிரண்டு மனைவிகளான ரஹ்மானி, வகீதாவால் வாரிசு இல்லாததால் மூன்றாவதாய் சுரையாவை திருமணம் செய்து கொள்கிறார். அத்தர் தொழிலை அடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஆண் வாரிசுதான் என்ற பக்கீரின் கண்டிப்பான வாக்கிற்கு மூன்று பெண்களாலும் கருச்சுமை உண்டாக்க இயலாமல் போக, முதல் மனைவி ரஹ்மானி ஒரு பெண்குழந்தைக்கு தாயாகிறாள். ஆண் வாரிசு இல்லாத கவலையால் தனது மனதை குதிரைப்பந்தயத்தின் மேல் திருப்பும் கரீமிற்கு முதலில் கிடைக்கும் வெற்றி இறுதிவரை நிலைக்காததால் கடனாளியாகி மனைவியர், சமூகம் முன் தோன்றவியலாமல் காணாமல் போகின்றார். வெவ்வேறு குணாம்சம் கொண்ட மூன்று மனைவியரும் சமூகச்சூழலில் வாழ்வை நகர்த்துகிறார்கள். யாமம் எனப்படும் குணாம்சம் மிக்க அபூர்வ நறுமணம் கொண்ட அத்தர் அழிந்து போகிறது.

தாயின் மறைவிற்கு பின் நங்கை சித்தியின் அரவணைப்பில் வளரும் பத்ரகிரி தனது தம்பி திருச்சிற்றம்பலத்தை கணிதத்தில் மேற்படிப்புக்காக லண்டன் அனுப்பி வைக்கின்றான். திருச்சிற்றம்பலம் தனது மனைவி தையல்நாயகியை, தனது அண்ணன் மற்றும் அண்ணி விசாலாவின் பாதுகாப்பில் தங்க வைக்கிறான். காமம் கை மீறிப்போகும் ஒரு பொழுதில் பத்ரகிரியும் தையல்நாயகியும் இணைகிறார்கள். இவர்களின் உறவு தெரிந்து விசாலா தனது குழந்தையுடன் பிரிந்து தாய்வீடு செல்கிறாள். தையல்நாயகிக்கு குழந்தை பிறக்கும்போது அவள் தன்னுடைய பாதுகாப்பின்மை பற்றிய அச்சத்தை பற்றிக் கொள்கிறாள். பத்ரகிரியை பிரிகிறாள். பத்ரகிரி தனித்து தனது நங்கை சித்தி வாழ்ந்த வீட்டில் புகுந்து கொள்கிறான்.

லண்டனிற்கு படிக்க சென்ற திருச்சிற்றம்பலம், லண்டனின் நாகரீக பழக்கத்திற்கு பயந்து தனித்து திரிகிறான். அங்கு அச்சுக்கலை பயில வந்த சற்குணம் லண்டன் பழக்கத்திற்கேற்றவனாய் இருப்பது திருச்சிற்றம்பலத்துக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஆனால் சில நாட்களில் சற்குணம் போக்கில் மாறுதல் ஏற்பட்டு அவன் ஆங்கில கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்குகிறான். போராட்ட முடிவில் சற்குணம் சிறை செல்ல, திருச்சிற்றம்பலத்தின் கணிதத்திறமை வெள்ளையருக்கு புலப்படுகிறது. விடுமுறையில் திரும்பும் திருச்சிற்றம்பலம் நிகழ்வுகள் அறிந்து தனது அண்ணியை சென்று பார்க்கின்றான். தனது இறுதிகாலம் வரை இனி அண்ணனின் குழந்தைக்காகவும் அண்ணிக்காகவும் வாழ முடிவெடுக்கின்றான்.

உறவினர்களிடம் ஏற்படும் சொத்து தகராறால் மதராபட்டணத்தில் நீதிக்காக காத்திருக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஒரு நாள் தனது சினேகிதியான எலிசபெத்தை அழைத்துக்கொண்டு மேல்மலைக்குச் செல்கிறார். அங்கு ஏற்படும் மனமாற்றத்தில் சொத்துக்களை தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைத்து விட்டு தனக்குச் சொந்தமான மேல்மலையையும் எலிசபெத்தின் பெயருக்கு எழுதி வைக்கிறார்.

ஆத்மதிருப்தி அல்லது தனது ஆன்மா பற்றிய கேள்விகளின் பதில் தேடி நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அலையும் பண்டாரம் தனது பயணங்களின் நடுவில் காமமுற்று ஒரு பெண்ணைத் தாயாக்கி தனக்கு எந்த பிள்ளை பிறந்தது என்று அறியாமல் மீண்டும் நடக்கத்தொடங்கும் நாயின் பின்னால் சஞ்சலத்துடன் நடந்து ஜீவமுக்தி அடைகிறார்.

புனைவு நாவலின் ஓட்டங்கள் சற்றும் மட்டுப்படாது தேர்ந்தெடுத்த களத்தின் ஊடாய் நகர்த்துவதும் அப்போதைய காலகட்டத்தின் அறிமுக நிகழ்வுகளை அசலாய் கொடுப்பதும் எஸ்.ராவின் பாணி. இதிலும் அது கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்பை கூட்டுகிறது.

மிகச்சிறந்த நாவல் என்ற அளவில் என்னால் இதை சொல்ல முடியுமா என்று தோணவில்லை. வாசிப்பு அனுபவத்திற்கேற்ற சுவையான புனைவுக்கதை எனும்வகையில் யாமம் நிச்சயம் வாசிக்கலாம்.

32 comments:

Vidhoosh on Friday, August 07, 2009 2:12:00 PM said...

நல்ல அறிமுகம். அதிலும், அப்துல் கரீம் நிச்சயம் என்னை இப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறார்.

நன்றி.
--வித்யா

தமிழன்-கறுப்பி... on Friday, August 07, 2009 2:28:00 PM said...

படிச்சு முடிச்சாச்சா மாப்பி?
பகிர்வுக்கு நன்றி,அப்புறமா வாறேன்.

ச.செந்தில்வேலன் on Friday, August 07, 2009 2:29:00 PM said...

நல்ல அறிமுகம். உங்கள் நடை அருமையாக உள்ளது..

உங்கள் கதையும் அழகு..

அனுஜன்யா on Friday, August 07, 2009 2:41:00 PM said...

யாமம் எனக்கும் பிடித்திருந்தது. ஒருவேளை எஸ்ரா எழுத்து பிடிக்குமென்பதால் இருக்கலாம்.

எஸ்ரா தளத்திலேயே ஜெமோ மற்றும் எஸ்.எ.பெருமாள் இவர்களின் 'யாமம்' பற்றிய விமர்சனம் படித்தீர்களா? நல்லா இருக்கும்.

நம்ம பதிவர்களில் Mrs.தேவ் மற்றும் பூமகள் இருவரும் யாமம் பற்றி எழுதினார்கள் என்று நினைவு.

இந்த மாதிரி நிறைய எழுதுங்கள் சென்ஷி.

அனுஜன்யா

சந்தனமுல்லை on Friday, August 07, 2009 2:59:00 PM said...

நல்ல பகிர்வு சென்ஷி..படிக்க ஆவலாக இருக்கிறது! நன்றி!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. on Friday, August 07, 2009 3:02:00 PM said...

நல்ல பகிர்வு சென்ஷி..படிக்க ஆவலாக இருக்கிறது! இது போன முறை வாங்க அலைந்தும் கிடைக்கவில்லை.
இந்தமுறை பிடிப்போம்,படிப்போம்.நன்றி!

வால்பையன் on Friday, August 07, 2009 3:18:00 PM said...

யாமம் என்ற வாசனை திரவியத்தையும் ஒரு கதாபாத்திரமாக கொண்ட பல சிறுகதைகளின் தொகுப்பே யாமம்!

நாய் பின்னாலயே பயணிக்கும் சித்தனின் கதையில் மட்டும் யாமம் வருவதில்லை, ஆனால் யாமத்தின் அடுத்த நீட்சியாக காமம் வந்து அவளுக்கு குழந்தையை கொடுத்து செல்கிறான்!

யாமம் தயாரிக்க தேவை ஆண்வாரிசு ஆனால் பிறந்ததோ பெண்வாரிசு!

சித்தனுக்கு குடும்பமே தேவையில்லை ஆனால் அவனுக்கு!


புனைவிற்காக படிக்கலாம் என்ற உங்கள் கூற்றை ஒப்புகொள்கிறேன்!

நேசமித்ரன் on Friday, August 07, 2009 3:24:00 PM said...

சென்ஷி

நகரவிடாத சொற்களைக் கொண்டிருக்கின்றன நெய்யப்பட்டிருக்கும் வாக்கியங்கள் .தன்னைத் தானுண்ணும் விலங்கு கொள்ளும் காமம்
காகிதம் தின்னுவது போல நிலாத்தின்னும் இருள் போல இரவைக் கொண்டிருக்கும்

யாமம் எஸ்.ராவின் வாசனைக் கசியும் சொற்களுக்காக வாசிக்கலாம் என்பதுதான் எனது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இத்தகைய பதிவுகளை உங்களிடமிருந்து பெற்றுத்தரும் தருணங்கள்
உங்களுக்கு தொடர்ந்து வாய்க்கட்டும்

☀நான் ஆதவன்☀ on Friday, August 07, 2009 3:43:00 PM said...

க்ரேட் தல.. படிச்சிருவோம்

முத்துலெட்சுமி/muthuletchumi on Friday, August 07, 2009 4:11:00 PM said...

நல்லா இருக்கு விமர்சனம்.. வாய்ப்பு எப்ப கிடைக்குதோ அப்ப வாசிச்சிடறேன்.. :)

நாஞ்சில் நாதம் on Friday, August 07, 2009 6:18:00 PM said...

நல்லா இருக்கு விமர்சனம்

நாடோடி இலக்கியன் on Friday, August 07, 2009 7:04:00 PM said...

நேற்றுதான் யாமம் வாங்கினேன், படித்துவிட்டு உங்க விமர்சனத்தை முழுமையா வாசிக்கிறேன் நண்பா.

கோபிநாத் on Friday, August 07, 2009 7:06:00 PM said...

குட் ;)

புத்தகத்தை கொடுத்த புண்ணியவன் பெயரை போட்ட என்ன குறைஞ்ச போயிடுவா!!

துபாய் ராஜா on Friday, August 07, 2009 7:08:00 PM said...

நல்லதொரு விமர்சனம்.

சிங்கக்குட்டி on Friday, August 07, 2009 7:26:00 PM said...

எனக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூரம்... இருந்தாலும் உங்கள் பதிவு அருமை :-))

சென்ஷி on Friday, August 07, 2009 7:34:00 PM said...

@ விதூஷ் வித்யா..

வருகைக்கு நன்றி வித்யா.. கண்டிப்பாக படிங்க. சுவாரசியமான வர்ணனைகளும் உரையாடல்களும் உங்களை நிச்சயம் கவரும். பக்கீருக்கும் கரீமிற்கும் நடக்கும் இரவைப்பற்றிய உரையாடல்கள் சிலிர்ப்பு!

@ தமிழன் கறுப்பி

:-) நன்றி மாப்பி. நீ கேட்டிருந்த புத்தகங்கள் கிடைச்சுடுச்சா!

@ செந்தில் வேலன்..

நன்றி செந்தில்வேலன்.

@ அனுஜன்யா..

பூமகளின் தளத்தில் யாமம் விமர்சனம் படித்திருக்கிறேன். மற்றவர்களின் விமர்சனம் இன்னும் படிக்கவில்லை. நிச்சயம் படித்துவிடுவேன் என்று நம்புகிறேன். பகிர்விற்கு நன்றி அனுஜன்யாஜி

சென்ஷி on Friday, August 07, 2009 7:38:00 PM said...

@ சந்தனமுல்லை..

நிச்சயம் படியுங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

@ கார்த்திக்கேயன்..

மறுமுறை தங்களை சந்திக்கும்பொழுது யாமம் புத்தகம் கொண்டு வருகிறேன் நண்பரே!

@ வால்பையன்..

சுவாரசியமான கதை சொல்லும் முறையிலும் உரையாடல் அமைப்பிலும் அங்கங்கே தூவியிருக்கும் வாக்கியப்பின்னல்களும் மனதை இழுக்க வைக்கும் நேர்த்தி கொண்டவை. இரண்டு முறை வாக்கிய அமைப்பிற்காக வாசித்தேன். நல்ல புனைவு என்ற அளவில் எனக்கு மிகப் பிடித்திருந்தது. நன்றி வால்பையன்.

@ நேசமித்ரன்..

உண்மையில் வாசிக்க ஆரம்பித்த பிறகு யாமத்தின் வாசனை நம்மைச் சுற்றிலும் சுழலும் பிரமை கொண்டிருந்தது. எஸ்.ராவின் நடையழகிற்கு தனியே சான்று தேவையா என்ன! :)

சென்ஷி on Friday, August 07, 2009 7:42:00 PM said...

@ நான் ஆதவன்..

நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் ஆதவன். படித்துப் பாருங்கள்.

@ முத்துக்கா..

வாய்ப்பு கிடைக்கும்பொழுது நிச்சயம் வாசித்து மகிழுங்கள். நல்ல புனைவு.

@ நாஞ்சில் நாதம்.

நன்றி தலைவரே!

@ நாடோடி இலக்கியன்..

மிக்க மகிழ்ச்சியான விசயம் நண்பா.. வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். வாசிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.

@ கோபிநாத்..

புத்தகம் வழங்கிய வள்ளல் - ஆசிப் அண்ணாச்சி :-)

@ துபாய் ராஜா..

நன்றி துபாய் ராஜா!

@ சிங்கக்குட்டி..

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வாசித்து பாருங்கள். சென்னையின் வரலாறுகளில் சில பக்கங்கள் நமக்கு இந்த புனைவில் கிடைக்கிறது. நன்றி சிங்கக்குட்டி தங்களின் வாழ்த்திற்கு!

susila on Friday, August 07, 2009 10:37:00 PM said...

Nice one jabar.. Give these books (nedungurudhi and yaamam) when we meet.

சென்ஷி on Friday, August 07, 2009 10:42:00 PM said...

@ சுசிலா..

நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரும் சமயம் இவ்விரு புத்தகங்களையும் கொண்டு வருகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கோபிநாத் on Sunday, August 09, 2009 10:24:00 AM said...

\\சென்ஷி said...
@ சுசிலா..

நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரும் சமயம் இவ்விரு புத்தகங்களையும் கொண்டு வருகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
\\

மாப்பி நீ அடுத்தவங்களுக்கு புக் கொடுக்கானுமுன்னா அதுக்கு நீ சொந்தமாகல்ல வாங்கனும்...அப்படி ஒரு பழக்கம் தான் உன்கிட்ட இல்லையே டா...;))))

சென்ஷி on Sunday, August 09, 2009 10:33:00 AM said...

@ கோபிநாத்..

//மாப்பி நீ அடுத்தவங்களுக்கு புக் கொடுக்கானுமுன்னா அதுக்கு நீ சொந்தமாகல்ல வாங்கனும்...அப்படி ஒரு பழக்கம் தான் உன்கிட்ட இல்லையே டா...;))))//

எனக்கு ஒரு நல்லவரை தெரியும். அவர்கிட்ட சொன்னா எப்பாடுபட்டாவது புத்தகத்தை வாங்கிக் கொடுத்துடுவாரு கோபி! :)

ஜெகநாதன் on Sunday, August 09, 2009 10:35:00 AM said...

சூப்பர்..! இன்னைக்கே உயிர்மை.காம்ல ஆர்டர் பண்ணிடலாம். முதல்ல வர்ற ​​பெரியண்ணனின் கோட் ரொம்ப அற்புதம். //எவளுமில்லாத கனவுகளும் நினைவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது//
இதை எவளுமில்லாத நினைவுகளும் கனவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது.. அப்படின்னு இருந்திருக்கணுமோ??

சென்ஷி on Sunday, August 09, 2009 11:29:00 AM said...

@ ஜெகநாதன்.

வருகைக்கு நன்றி ஜெகநாதன். நல்ல புனைவு நிச்சயம் படியுங்கள்.

கனவுகளில்லாத இரவு நிச்சயம் வரமாகத்தான் எனக்குப் படுகிறது. கனவுகள் எவளுடையதோ சாபமாகத்தான் கருதி வந்து கொண்டிருக்கிறேன் :-)

ஜெகநாதன் on Sunday, August 09, 2009 11:34:00 AM said...

ஆர்டர் பண்ணியாச்சு. யாமம் அப்புறம் ​மேலும் சில புத்தகங்களும். உங்களுக்கு நன்றி. அப்புறம் கனவை கன்னிச்சாபம்ன்னு சொல்றீங்களே? ​ம்ம்... இவரும் பாதிக்கப்பட்டிருக்காரு!

சங்கா on Sunday, August 09, 2009 11:52:00 AM said...

தலைவரே, அறிமுகத்துக்கு நன்றி. நான் புத்தகங்கள் படித்து சில வருடங்களாகி விட்டன. பார்க்கலாம், மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். அப்புறம் மருத்துவர் SUREஷ், தம்பி ஜெகநாதனுக்குக் குடுத்த யோசனையின் அடிப்படையில் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இணைத்து விட்டேன். உபயோகித்துக் கொள்ளுங்கள்!

சங்கா on Sunday, August 09, 2009 11:53:00 AM said...

சொல்ல மறந்துட்டேனே, தம்பி சொன்ன மாதிரி தலைவரின் முதல் பத்தி அருமை!

thurka on Monday, August 10, 2009 5:34:00 AM said...

மிகவும் நன்று.

கார்த்திக் on Monday, August 10, 2009 12:21:00 PM said...

நல்ல நாவல் தல

இந்நாவல் பற்றி நான் ரொம்ப ரசிச்ச விமர்சனம் http://elanko.net/?p=613

லவ்டேல் மேடி on Monday, August 10, 2009 8:33:00 PM said...

நல்ல பதிவு ..... நல்ல விமர்சனம்.... !!

எனக்கு முன்னாடி பின்னூட்டம் போட்ட தொழிலதிபர் திரு .கார்த்திக் அவர்கள் ...
" யாமம் " புக்க வாங்கிட்டு போனாரு....!! திரும்ப தந்தவுடன் ... மீதிய படிக்கணும்....!!!

அமிர்தவர்ஷினி அம்மா on Wednesday, August 12, 2009 11:43:00 AM said...

நல்ல பகிர்வு.

சென்ஷி on Monday, August 17, 2009 7:10:00 PM said...

சங்கா, துர்கா, கார்த்திக், லவ் டேல் மேடி, அமித்து அம்மா..

நன்றிகள் பல....

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com