நம்முடைய நெருங்கிய நண்பர்கள் என்று நாம் கருதுபவர்களின் அனைத்து கருப்பு ரகசியங்களும் நமக்குத் தெரியுமா? நமது இணையின் இரகசியங்கள் நமக்குத் தெரியுமா? பிறரிடம் பகிர இயலாத ரகசியங்களை நாமும் நம் நண்பர்களிடம் பகிர்கிறோமா? நம்மிடம் உண்மையாக பழகுகிறார்கள் என்பது மாத்திரமே நட்பின் அடையாளமா? தனி நபர்கள் குழுவான நண்பர்கள் ஆனபின்பு அவர்கள் அனைவரையும் நாம் ஒரே போன்று மதிக்கின்றோமா? அதில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரை சீண்டுதல் உள்ளதா? ஒருவேளை பிறருக்குத் தெரியாத நம்மை பற்றிய ரகசியத்தை நம் கண் முன்பே நண்பர்கள் தெரிந்துகொண்டால் நமது மற்றும் அவர்களது எண்ணம்/செயல்/சூழல் என்னவாக இருக்கும்? நாகரிகம் என்பதன் எல்லை நட்பின் எந்த கோட்டில் தொடங்கி முடிகிறது?
உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திரைப்படம் என்னும் பிரிவில் கின்னஸ் விருது பெற்ற திரைப்படம். 18 மொழிகளில் மீள் உருவாக்கம் பெற்றுள்ள Perfetti sconosciuti என்ற இதாலியன் மொழி திரைப்படத்தின் (Perfect Strangers) கதை இதுதான். நான் கண்டது ஸ்பானிஷ் மொழியாக்க திரைப்படம் Perfectos desconocidos.
மூன்று தம்பதிகள் உள்ளடக்கிய ஏழு நபர்கள் அடங்கிய நெருங்கிய நண்பர்கள் குழாம், இரவுணவுக்கான விருந்தில் இணைகிறார்கள். அப்போது மொபைல்போன்கள் உறவுகளை நட்பை விரிசல் ஏற்படுத்துவதில் முன்னிலை வகிப்பதைக் குறித்த பேச்சு எழுகையில், எல்லோரும் தம்மிடம் எந்த ரகசியமும் இல்லை என்று ஒப்பிக்கின்றனர். இதனால் இதை ஒரு விளையாட்டாக முன்னெடுக்க, சாப்பிட்டு முடியும்வரை அனைவரது செல்பேசிகளையும் விருந்து மேஜையில் வைக்க வேண்டும். எந்த ஒரு அழைப்பு அல்லது மெசேஜ் எனப்படும் செய்திக்குறிப்பு வந்தாலும் அதை நண்பர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைவரது செல்லிட பேசிகளும் உணவு மேஜையில் மேல் வைக்கப்பட, செல்பேசி அழைப்பு ஒலி சத்தத்திற்காக ஒவ்வொருவரின் மனதிலும் பதட்டம் அதிகரிக்க... நண்பர்களின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
நெருங்கிய நண்பர்கள் என்றழைக்கப்படும் மிகச்சிறிய கூட்டம் கூட நமது இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அன்னியர்களாக தோற்றமளிக்கத் தொடங்கிவிடுவதை இத்தனை பட்டவர்த்தனமாய் சொல்லி இருப்பதே இத்திரைப்படம் பெற்ற வெற்றி.
ஒவ்வொரு மொழியாக்கத்திலும் அவரவர்க்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான பிராந்திய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
பொதுவாக ஆந்தாலஜி என்ற வகையில் சேரும் திரைப்படங்களின் மேல் பெரிய காதலுண்டு. சிறு சிறு குறும்படங்களை இணைத்து ஒரே திரைப்படமாக வெளியிடுவது. தமிழில் அதிகம் முயற்சிக்காத, முயற்சிகளும் வெற்றிபெறாத வகைகளுள் ஒன்று. ஆங்கில ஆந்தாலஜி திரைப்படங்கள் பெரும்பாலும் ஹாரர் வகைமைகளுள் பொருந்தியிருப்பினும் பார்த்தவரையில் திருப்திக்குள்ளாக்குவது. தனிப்பட்ட ரசனை என்பதால் விமர்சனங்களை பொதுவில் பகிர்வதில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் பார்த்த Tales from the Hood 2 -ம் பாகத்தில் வரும் ஒரு கதையான The Sacrifice அசத்திவிட்டது.
Tales from the Hood முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் பொதுவான கதையோட்டம் அமெரிக்க கறுப்பினத்தவர்களைக் குறித்தது. அரசியல் இனப்பாகுபாடு, நிறப்பிரிவினை, போதை மருந்து கடத்தல்கள் மற்றும் ப்ளாக் மேஜிக் எனப்படும் சூனியங்களைக் குறித்தவைகளாக அமைந்துள்ளன.
The Sacrifice கதை - 1955ல் வெள்ளையின சிறுமியுடன் உரையாடியதற்காக கறுப்பின சிறுவனான எம்மெட் டில்-ஐ கட்டி வைத்து துன்புறுத்துகின்றனர். நிகழ்காலத்தில் கறுப்பின பணக்காரரான ஹென்றி ப்ராட்லி தனது கர்ப்பமான வெள்ளை மனைவியுடன் வசிக்கிறார். கறுப்பின மக்களுக்கு எதிரான மனப்போக்கு கொண்ட வில்லியம் காட்டன் என்னும் வெள்ளையருக்கு தேர்தலில் ஆதரவும் தருகிறார். தேர்தல் செலவுகளுக்காக பணம் திரட்ட வேண்டி ப்ராட்லி வீட்டில் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழ்கிறது. முன்பு கருச்சிதைவு ஏற்பட்டதால் ஏதும் மனக்குழப்பங்களின்றி இருக்க முயலும் மனைவியின் கண்களுக்கு மாத்திரம் எம்மெட் தென்படுகின்றான். அதற்கு பிறகு நடக்கும் திகிலான சம்பவங்களின் மூலம் கறுப்பினத்தவர்களின் மீதான வெள்ளையினத்தவர்களின் அரசியல், தியாகங்கள் ஆகியவை முன்வைக்கப்படுகின்றன.
தற்சமயம் நாட்டில் நிகழும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிரான போராட்டங்கள், அவற்றின் மீதான அரசியல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டது மனது.
அட்டகாசமான சிறுகதையமைப்பு கொண்ட திரைப்படம். ஆர்வமுள்ளோர் குறைந்தபட்சம் திரைப்படத்தின் இந்த பகுதியையேனும் காணத்தவறாதீர்கள்.
Mard Ko Dard Nahi Hota (Hindi: 2018)
பிறப்பிலிருந்தே வலியே தெரியாத ஒரு மனிதன் அசகாய சூரன் (Super Hero) ஆக ஆசைப்படுதல் - இந்த ஒரு வரிதான் கதை. ஆனால் அதைத் திரைக்கதையாக்கி கொடுத்திருப்பதில் அட்டகாசமான ஆயிரம்சர பட்டாசாக்கி வெடித்திருக்கிறார்கள்.
இயக்குநர்: வாசன் பாலா. தமிழர் போலும். இடையிடையே வரும் தமிழ் வசனங்கள் போடா ராஸ்கோலு வகையாக இல்லாமல், அருமையாக ஒத்திசைந்துள்ளன. ஹாலிவுட் பிகிரேட் வகை ஆக்சன் திரைப்படங்களை ஒத்த சண்டைக்காட்சிகள். அதிலும் என் மனங்கவர்ந்த Kick-Ass போன்ற திரைப்படம் தமிழில் வராதா என்ற எதிர்பார்ப்பை நிரம்ப பூர்த்தி செய்துள்ள அவல நகைச்சுவை (Dark Humor) வகைத்திரைப்படம்.
சூப்பர் ஹீரோ திரைப்படத்தைப் பொறுத்தவரை, நாயகன், எதிர் நாயகன் இருவருக்கு மாத்திரமே வாய்ப்பு அதிகம் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் ஓரமாய் படுத்துக்கொண்டு வானொலியில் பாடல் கேட்கும் சிறுவன், சாமிக்கு மாலைப் போட்டுக்கொண்டவர், செக்யூரிடி ஆபிஸ் பியூன், துப்பாக்கி தர மறுக்கும் ஆபிசர் என்று அத்தனை பேரும் ஏதேனும் ஒரு கட்டமைப்பில் (ஃப்ரேம்!) தங்கள் முத்திரையைப் பதித்துவிடுகின்றனர். இயல்பான வசனங்கள் வேறு மனதை கொள்ளை கொள்ள வைத்தன.
குறைபாடுகளே இல்லையா என்றால் உண்டு. இறுதிக்காட்சியில் இயற்கை ஹீரோவுக்கு உதவும் காட்சி- கமர்சியல் சினிமா என்பதால் சல்தாஹே! ஆரம்பத்தில் வரும் சிறுவர்களின் சூப்பர் ஹீரோ பற்றிய காட்சி அழகு என்றாலும், பயங்கர நீளமாய்ப் பட்டது. அதை அதிகமாய் குறைத்திருக்கலாம். சிறுவர்களின் காட்சிகள் ஓவர்டோஸாகி ஒரு கட்டத்தில் அணைத்துவிடுவோமா என்றிருந்தவனை ஆரம்பத்தில் மிரட்டலான சண்டைக்காட்சி கட்டிப்போட்டுவிட்டதால் இரவு முழுமையாக திரைப்படம் கண்டு ரசித்தபின்பே தூங்கினேன்.