Saturday, January 25, 2020

The Mentalist


எப்பொழுதும் போல மிகப்பெரிய சுவாரஸ்யங்கள் ஏதுமில்லாமல்தான் மெண்டலிஸ்டைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் நாற்பது நிமிடங்களில் முடியும் ஆந்தாலஜி தொடர் என்பதால் மாத்திரமே பார்ப்பதற்குண்டான தைரியத்தையும் ஆசுவாசத்தையும் தந்தது. ஆனால்...

மெண்டலிஸ்ட் நாயகன் அதிவீர பராக்கிரமசாலி அல்ல. எங்கேனும் துப்பாக்கிக்குண்டு வெடிக்கும் ஓசை கேட்டால் உடனே பதுங்கிவிடுபவன். அடிதடி என்று  யாரும் வந்தால் போலீசிற்கு பின்னால் ஒளிந்து கொள்பவன். தனது மூளைத்திறனை மாத்திரம் நம்புபவன். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அநியாயத்திற்கு தன்னலமாக யோசிக்கக்கூடியவன். ஆனால்...

தினமும் தொடர்ச்சியாக தொடரை மாத்திரம் பார்த்துக்கொண்டிருத்தல் சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடாதென்ற எண்ணத்தில் அவ்வப்போது சில திரைப்படங்களையும் பார்த்து வந்தேன். கடைசி வாரத்தில் பார்த்த V1 போன்ற திரைப்படங்கள் The Mentalist தொடரை தொடர்ந்து பார்ப்பதற்கான உத்வேகத்தை அளித்தன என்றால் மிகையல்ல. ஆனால்...

தொடரின் நாயகி லிஸ்பனாக தோழி Robin Tunney அசத்தி இருந்தார். ஏற்கனவே சாத்தான் அனுபவிக்கத் துடிக்கும் கதையின் நாயகியாக End of Days, பனிபடர்ந்த மலைப்பள்ளத்தாக்கில் சிக்கித்தவிக்கும் தங்கையாக Vertical Limit போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகியிருந்ததால் ஐந்தாம் எபிசோடிற்குப் பிறகு சிபிஐ ஏஜெண்டாய் காண உறுத்தவில்லை. ஆயினும் வான் பெல்டாக நடித்த Amanda Righettiயின் முன் உறை போடக் காணாதென்றாலும் சல்தாஹே.. ஆனால்...

கதை: நாயகன் பல வருடங்களாகக் கற்றுக்கொண்ட ஏமாற்றுத்தொழிலைக்கொண்டு, மக்களிடத்தில் பிரபலமான சைகிக் ஆக உலா வருகிறான். இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் என்ற தொழிலின் மூலம் வாழ்வை நகர்த்துபவன். அவனது பழைய கதை முழுமையாக இல்லாது தொடரில் அங்கங்கு காட்டப்படுகிறது. அவனைப் பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே நமக்கு தெரியவருகிறது. ரெட் ஜான் என்ற தொடர் கொலைகாரன் பற்றிய குறிப்புகளை தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்டதால், மனைவி குழந்தையை இழந்தவன். அதனால் ரெட் ஜானைப் பிடித்துக் கொல்லுதலையே லட்சியமாகக் கொண்டு தன்னுடைய விசேஷ சக்தியின் காவல்துறையினருக்கு உதவுகின்றான். இவனது விசேச சக்தி ஒன்றே ஒன்றுதான்: சூழ்நிலைகளை, மனிதர்களை, பொருட்களை கணிப்பது. பெரும்பாலும் அல்ல எப்பொழுதுமே தவறாக இருந்துவிடாத கணிப்புகளின் நாயகனாக இவன் இருப்பதால் பல்வேறு குற்றங்களின் பின்னணியையும், குற்றவாளிகளையும் எளிதாய் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். ஆனால்...

இதுபோல பல்வேறு ஆனால்கள் தொக்கி நிற்கின்றது. காரணம் ஒன்றே ஒன்றுதான். நாயகனின் சூழலைக் கண்டுணரும் திறனில் ரசிகர்களுக்கான இடம் எதுவும் இல்லை. மிகச்சிலவற்றில் இதுதான் நடந்திருக்குமென்று நம்மாலும் உணர முடியவைக்குமளவு திரைக்கதை அமைப்புதான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்ததாக என்னால் இன்றும் நம்பப்படுகின்ற Monkஐப் போன்று வித்தியாசமான குற்றங்களின் பின்னணியில் தாழ்வு மனப்பான்மையுடன் அதிகபட்ச பயங்களுடனும் வாழ்கின்ற நாயகனாகவோ, Jonathan Creek -ஐப் போன்று யாராலும் இயலாத குற்றங்களின் சாத்தியங்களை எளிமையாக கண்டுபிடிக்கின்ற நாயகனாகவோ இல்லாமல் இருப்பதால் குறையாக இருக்கின்றது. ஆனால் அந்த காவல்துறை குற்றப்பிரிவினரிடையே நடக்கும் மோதல், சூழ்ச்சி, காதல், துரோகம், கணக்கில்லா கொலைகள், ஒன்றிரெண்டு குண்டுவெடிப்பு என்று ஒன்றுடன் ஒன்று வலையாகப் பின்னி பிணைந்து இருந்ததே தொடரை முழுமையாக் காண்பதற்கான ஒரே காரணம். லிஸ்பன், ஜேக் திருமணத்துடன் தொடர் முடிவடைந்தாலும், அதற்கு முன்பே இவர்களின் காதல் தெரியவரும்போதே நிறுத்தி இருக்கலாமோ என்ற எண்ணமும் இருந்தது. வாழ்க மணமக்களென்று கூறி வாழ்த்து கூறி முடித்துக்கொண்டுள்ளனர். அடுத்தடுத்த பாகங்கள் எடுத்திருக்கக்கூடும். ஆனால் ஒளிபரப்பாத காரணம் பழைய ஆட்கள் இல்லாதது, தொடர் மசமசவென்று  தொய்வடைந்தது என்பதாக இருக்கலாம். ஆனால் தப்பித்துவிட்ட பழைய குற்றவாளிகள் எவரையும் விடாது எப்போதேனும் வேறு ஏதேனுமொரு தொடரின் அத்தியாயத்தில் பிடித்துவிடுகின்றனர். நமக்குத்தான் கதையை நினைவில் வைத்திருக்க வேண்டுமே என்ற கவலை தனியே நிற்கிறது.

மொத்தத்தில் மெண்டலிஸ்ட் - பார்ப்பதற்கு குறையென்று பெரியதாய் எதுவுமில்லை. பார்க்காவிட்டாலும் ஏதும் குறைந்து போய்விடப்போவதில்லை.

0 comments:

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com