Friday, December 19, 2008

நிமித்தக்குறிப்புகள் - 3

55 comments

கயலைக் கண்களாய் கொண்டாய்
விரல்களை வெண்டையாய் ஆக்கினாய்
துடியை இடுப்பாய் மாற்றினாய்
இரும்பை கொண்டு ஏன்
இதயம் செய்தாய்..!?

Thursday, December 18, 2008

நிமித்தக் குறிப்புகள் - 2

62 comments

பென்சில் முனை கடித்து
யோசனையின்
புருவங்கள் வில்லாக்கி
காகிதத்தில் அடித்து திருத்தி
பார்வை கொடுத்தாய்
"ஆஹா! கவிதை" என்றேன்.

வெட்கி
நெருங்கி
கன்னம் தொட்டு
இதழ் பொருத்தி
சென்றாய்
"அட, காதல் கவிதை!" என்றேன்
.

Wednesday, December 17, 2008

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி

6 comments
தமிழில் அறிவியல் புனைகதை இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவையொட்டி, அவரது நினைவைப் போற்றும் விதமாக நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் நடத்தி, தமிழில் அறிவியல் புனைகதை மரபை தொடர்ந்து வளர்த்தெடுக்க எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரின் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் சென்னையிலிருந்து இயங்கும் ஆழி பதிப்பகமும் இணைந்து முடிவு செய்துள்ளன.


சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டி குறித்த தகவல்கள் பின்வரும் இணைப்பில் இருக்கின்றன. புனைகதை எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பின் போட்டியில் கலந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம். மேலும் இந்த வலைப்பக்கத்தின் இணைப்பை ஆர்வம் இருக்கக்கூடிய பிறருக்கு அனுப்பிவையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்று அண்ணன் தெ.கா. அவர்களுக்கு வந்த மெயிலை தொடர்ந்து பதிவேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் இதையும் விளம்பர அறிவிப்பில் இணைத்தாகிவிட்டது.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள உரலை அணுகவும்.

http://aazhipublishers.com/sujatha.html

Tuesday, December 16, 2008

மெசியாவின் காயங்களும் மஞ்சள் வெயிலும்

42 comments
மெசியாவின் காயங்கள்

என்னைப்பொறுத்தவ‌ரை ந‌ல்ல‌ க‌விதைக‌ளின் சிற‌ப்பு அரூப‌த்தை உண‌ர‌வைத்த‌ல் அல்ல‌து ந‌ம்மை ந‌ம்மிட‌மிருந்து பிரித்து ந‌ம்மை ந‌ம‌க்கே புதிதாய் காட்டுத‌ல். "மெசியாவின் காய‌ங்க‌ள்" த‌னித்த‌ அரூப‌ நிலை சி‌ந்தும் புத்த‌ம் புதிய‌ வாக்கிய‌த்தொட‌ர்க‌ளாய் ந‌ம்மை விடாம‌ல் துர‌த்துகின்ற‌ பெருவெளியின் கூரிய‌வாளாய் இருந்த‌து. ப‌க‌லைத் தொலைத்துவிட்டு இர‌வுக‌ளில் ஏங்கி அழுகின்ற‌ குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தில் கிடைத்த பதில் காண இயலாத கேள்விக‌ளை மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்தியது. ஆனால் இப்போது பதில்க‌ள் கிடைக்காத‌ ஏக்க‌ம் இல்லை. சூழ‌லின் த‌னித்துவங்கள்‌ என‌க்குத் தேவைய‌ற்ற‌து என்ற பேச்சுக்களின் முடிவில் கிடைக்கின்ற‌ மெல்லிய‌ வ‌ருத்த‌ம் எல்லாக்க‌விதைக‌ளிலும் கிடைக்கின்ற‌ன‌. புத்தகத்திற்கு யூமா.வாசுகி எழுதியுள்ள கசங்கல் பிரதி வாசகர்களுக்கான இரட்டை கவிதை விருந்து.

நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ க‌விதைப்புத்த‌க‌ம் வாசித்த‌ திருப்தி கிடைத்த‌து. ந‌ன்றி ஜெ.பிரான்சிஸ் கிருபா.

க‌விதைக‌ளில் சில‌ உங்க‌ள் பார்வைக்காக‌வும்...

"இச்ச‌ன்ன‌ல் வழியே தெரிவ‌து
வான‌த்தின் ஒரு ப‌குதிதான்"
என்றான்.


முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?


=============================================

உயிர் பிரியும் க‌ண‌த்தில்
த‌ம் காய‌ங்க‌ளை
க‌டைசியாய் பார்வையிட்ட‌
மெசியாவின் க‌ண்க‌ளை
ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் க‌ழித்து
இன்று ச‌ந்தித்தேன்
க‌ட‌ற்க‌ரையில்
ம‌டித்த‌ கைப்பைக‌ளுட‌ன்
சூழ்ந்து நின்ற‌ ம‌னித‌ர்க‌ளுக்கு
ம‌த்தியில் ம‌ல்லாத்தியிட்டு
த‌ன் வ‌யிற்றில் இற‌ங்கி முழு
வ‌ட்ட‌ம‌டித்த‌ க‌த்தியைத்
த‌லை தூக்கி எட்டிப் பார்த்த‌து
ஆமை


===============================================

சிலிர்க்க‌ச் சிலிர்க்க‌ அலைக‌ளை ம‌றித்து
முத்த‌ம் த‌ரும்போதெல்லாம்
துடிக்க‌த் துடிக்க‌ ஒரு மீனைப் பிடித்து
அப்ப‌ற‌வைக்குத் த‌ருகிற‌து
இக்க‌டல்.


=================================================

மித‌க்கும் கிர‌க‌த்தில்
க‌ன‌க்கும் வாழ்வை
சும‌க்கும் ப‌க்குவ‌ம‌ற்ற‌வ‌னை
முற்றுகையிடும் மௌன‌மே
வில‌கிப் போ.
கூச்ச‌லிட‌வில்லையெனினும்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக‌ நீ
கொன்று கொண்டிருக்கிறாய்
ஏழு ஏழு சென்டிமீட்ட‌ராய்
எவ‌ரெஸ்ட் சிக‌ரம்
எங்கு ந‌க‌ர்ந்து போனால் என‌க்கென்ன‌
நான் எழுந்து ந‌ட‌க்க‌ வேண்டும்
அங்கொரு பிட்சு நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌
க‌ண் விழித்திருந்தால் நான் என்ன‌ செய்ய‌ட்டும்
நான் கொஞ்ச‌ நேர‌மேனும் உற‌ங்கி எழ‌ வேண்டும்.
க‌ரையில் ப‌ட‌குக‌ள் அட‌கில் இருப்ப‌தாய்
குமுறும் க‌ற்ப‌னை என்னுடைய‌த‌ல்ல‌.
க‌ட‌வுளுக்கு ஆள் தேடும்
க‌ன‌வுக‌ளுக்கு அஞ்சி
புய‌லாடிய‌ ஏழுக‌ட‌ல் ந‌ட‌ன‌ங்க‌ள்
க‌ண்டு பிதுங்கிய‌ விழிக‌ள்
கைக‌ளுக்கு எட்டாத‌ தூர‌த்தில்.
எண்ணிக் கொண்டுதானிருக்கிறேன்
திருட்டுபோய் நான் மீளாத‌
ஏழாவ‌து அதிகாலை இது.


=======================================

வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ

===========================================

கவிதைகள் முழுவதுமே முழுக்க முழுக்க புத்தம் புதிய வார்த்தைக்கோர்வைகளோடு மூன்றாம் பார்வைகளின் தனித்த ரசனைகள் கொட்டிக்கிடக்கின்றன. யோனி, குறி, ரத்தம், வெறி எதையும் விட்டு வைக்காத கவித்தொகுப்பு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%

ம‌ஞ்ச‌ள் வெயில்

உங்க‌ள் காத‌லியை உங்க‌ளால் எந்த‌ள‌வுக்கு காத‌லிக்க‌ முடியும். உங்களின் காதலை அவள் மறுத்தால் அவள் உங்களை வெறுத்தால் உங்களது காதலை அவளுக்கு எப்படி புரிய வைக்க முடியும். அவ‌ள் உங்கள் கண்காணாத தொலைவில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் அவளுக்கு உங்கள் காதலை எப்படி புரியவைப்பீர்கள்? மஞ்சள் வெயில் காதலின் போதையை சொல்கிறது. காதலின் வலியை அனுபவிக்க வைக்கிறது. காதலில் பைத்தியமாகப் போகும் ஒருவனின் வாழ்க்கையை தருகிறது. மஞ்சள் வெயில் தன் காதலை தன் காதலிக்கு புரியவைக்க காதலனால் எழுதப்படுகின்ற கடிதம். சற்றே நீண்ட தன் தினப்படி நிகழ்வுகளில் கூட அவள் இவனை அழுத்தமாய் பாதிப்பதை, அவள் மீதான இவனது காதலை இணைத்து காதலின் வலிகளை சொல்கின்ற கடிதம்.

ம‌ஞ்ச‌ள் வெயிலின் நாய‌க‌ன் க‌திர‌வ‌ன் ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் ஓவிய‌ராக‌ ப‌ணிபுரிப‌வன். அங்கு புதிதாக‌ க‌ணிணித்துறைக்கு ப‌ணியில் சேருகின்ற‌ ஜீவிதா, க‌திர‌வ‌னின் ஓவிய‌த்திற‌மையில் ம‌ய‌ங்குகிறாள். புதிய‌வ‌ர்க‌ளிட‌ம் பேச‌த் த‌ய‌ங்குகின்ற, பெண்க‌ளிட‌ம் ப‌ழ‌க‌அச்ச‌ப்ப‌டுகின்ற‌ க‌திர‌வ‌ன் ஜீவிதா த‌ன‌து ர‌சிகை என‌த்தெரிந்து சந்தோஷப்படுகிறான். ச‌க‌ஜ‌மாகிறான்.

இவ‌னுட‌னான‌ அவ‌ள‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ள் க‌திருக்கு காத‌லை அறிமுக‌ம் செய்கின்ற‌ன‌. அவ‌னுக்கு நிச்ச‌ய‌மாய் தெரிகிற‌து. அவ‌ள் த‌ன்னை காத‌லிப்ப‌து. பெண்க‌ளுக்கான‌ இய‌ல்பான‌ த‌ய‌க்க‌ங்க‌ள் அவ‌ள‌து காத‌லை த‌ன்னிட‌ம் சொல்ல‌ த‌டை செய்கிற‌து என்ற‌ எண்ண‌த்தில் த‌ன‌து காத‌லை அவ‌ளிட‌ம் சொல்கிறான். அவ‌ள் அத‌னை மறுத்துவிட்டு அவ‌னை புற‌க்க‌ணிக்க‌ ஆர‌ம்பிக்கின்றாள். இத‌ன்பிற‌கான‌ நாய‌க‌னின் நிக‌ழ்வுக‌ளோட்ட‌ங்க‌ள் க‌தைக்க‌ள‌னில் செல்கின்ற‌ன.

காதல் வ‌லிக‌ளில் கொடிய‌தாய் உண‌ருவ‌து புற‌க்க‌ணிப்புதான். அவ‌ளைப்ப‌ற்றி அறியாத‌வ‌ரை அவ‌னுக்குள் எந்த‌ க‌வ‌லையும் இன்றி இருக்கின்ற‌ வாழ்வில் அவள் அவனைச் ச‌ந்தித்து அவனிட‌ம் பேசிப்ப‌ழகி இவன் தனது காத‌லை சொல்லிய‌வுட‌ன் அவ‌ள் அவ‌னை புற‌க்க‌ணித்த‌ப்பின் இவ‌னுக்கு ஏற்ப‌டுகின்ற‌ வ‌லி, அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு மாத்திர‌மே புரிய‌ வைக்க‌ இய‌லும்.

அப்ப‌டியானால் அவ‌ள் இவ‌னை காத‌லிக்க‌வில்லையா இவ‌ன‌து க‌ண்ணோட்ட‌ங்க‌ள் த‌வ‌றான‌தாக‌ இருக்கின்ற‌தா என்ற‌ இய‌ல்பான‌ அச்ச‌மும் ம‌ன‌திற்குள் எழுந்தாலும் இவ‌ன‌து பார்வை த‌வ‌றான‌தாக‌ இல்லாத‌ கார‌ண‌த்தினால் அந்த‌ காத‌லியின் மேல் இய‌ல்பான‌ கோப‌ம் எழுவ‌தை த‌விர்க்க‌ இய‌லாத‌தாகிற‌து.

க‌திர‌வ‌னின் ந‌ண்ப‌ர்க‌ள் அவனது காத‌லுக்கு உத‌வுத‌ல், கதிரவனின் காதலுக்காக வருந்துகின்ற பத்திரிகை நண்பர், க‌திர‌வ‌னின் அறையில் தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌னின் குழ‌ந்தையின் ஒற்றை ஷு, க‌திர‌வ‌னின் ஆலோச‌கராக‌ உற்ற‌ தோழ‌ராக‌ வ‌ருகின்ற‌ அந்த‌ வாட்ச்மேன், ஓவிய‌ம் வ‌ரைந்து கேட்டு வ‌ருகின்ற‌ குழ‌ந்தைக‌ள், கணிணியில் கடிதத்தை தட்டச்சு செய்து தருகின்ற பெண், என‌ அத்த‌னை க‌தாபாத்திர‌ங்க‌ளும், சூழ‌ல்க‌ளும் இய‌ல்புக்கேற்ற‌தாய் ம‌ன‌தில் த‌ங்க‌ வைக்கின்ற‌து. கதிரவனின் அழுகை, சிரிப்பு, கோபம், வருத்தம், ரத்தம், வியர்வை, அவனது அறையின் கட்டமைப்பு, அவனது தற்கொலை முயற்சி, குடித்தல் என அத்தனை நிகழ்வுகளிலும் புதிய வாக்கிய அமைப்புகள் கொண்டு சொல்லியிருப்பது கதிரவனை வாசிப்பவர்களிடையே மிக எளிதாக மிக நெருக்கமாக்குகிறது. இத்தனை வார்த்தைகள் கொண்ட காதலை அந்த புத்தகம் தாங்கிக்கொண்டிருப்பது மிக ஆச்சரியமாகவும் அழகாவும் இருந்தது.

க‌விதையாய் காத‌லை சொல்ல‌ முடியும். காத‌லை க‌விதையாயும் சொல்ல‌ முடியும் என‌ வார்த்தைச்சித்திர‌ங்க‌ளில் காத‌லில் மூழ்க‌டித்து ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்தும் எழுத்துக்க‌ளில் நெருங்குகின்றார் யூமா. வாசுகி.

உதார‌ண‌மாய் ஜீவிதா வ‌சிக்கின்ற‌ தெருப்ப‌க்க‌ம் சென்று அங்கிருக்கின்ற‌ பேருந்து நிழ‌ற்குடை, ம‌ர‌ங்க‌ள், இலைக‌ள், பூக்க‌ள், பாதைக‌ள் என‌ எல்லாவ‌ற்றிலும் த‌ன‌து முத்த‌ங்க‌ளை ப‌திக்கின்றான் க‌திர‌வ‌ன். ஏனெனில் நாளை காலை அவ‌ள் இவ்வ‌ழியாய் வ‌ரும்பொழுது த‌ன‌து முத்த‌ங்க‌ளில் ஏதாவ‌தொன்று அவ‌ளிட‌ம் சென்று சேர்ந்துவிடாதா என்ற‌ ஆசையினால். பைத்திய‌க்கார‌த்த‌ன‌மாக‌ தோன்ற‌க்கூடும் ஆனால் அது காத‌லே பைத்திய‌க்கார‌த்த‌ன‌மான‌து என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ருத்தாக‌ இருக்க‌க்கூடும்.

ஜீவிதாவிற்கு எழுதிய‌ க‌டித‌த்திற்கான‌ ப‌தில் க‌திர‌வ‌னுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற முடிவு தெரியாமலே கதை முடிகிறது. ஆனால் இத்த‌னை ஆசைக‌ளை சும‌ந்து கிட‌க்கின்ற‌ க‌திர‌வ‌னின் காத‌லை ஜீவிதாவால் தாங்க‌ இய‌லுமா என்ற‌ ஆச்சரிய‌ம்தான் ம‌ன‌தில் த‌ங்குகிற‌து.

காதலித்த அல்லது காதலிக்கப்போகும் ஆண்களுக்கு நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் காதலை கதிரவன் ஞாபகப்படுத்துவார். பெண்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு ஜீவிதா உருவாகாதவரை சந்தோஷம்தான் என்பதை தவிர...

Sunday, December 14, 2008

ராப் அக்காவுக்கு பொறந்தநாளுங்கோ.....!!!!!!!

51 comments











தமிழ்மணத்தின் மொக்கைக்கவுஜாயினி, அகிலாண்ட நாயகனின் தானைத்தலைவி, NDTV புகழ் எங்கள் ராப் அக்கா இன்று (14-12-2008) பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர்

அக்கிலாண்ட நாயகன்

கவர்ச்ச்சீய் கன்னன்

சில்க் சட்டைக்காரன்

காவலுக்கு கெட்டிக்காரன்

விரைவில் Aஸ்கார் வாங்கப்போகும்

எங்கள் அன்பு

ஜே.கே. ரித்தீஷ்

அக்கிலாண்ட நாயகனின் புகழை பரப்புவதில் படாத பாடு பட்டு வரும் ராப் அக்காவின் பிறந்தநாளில் கலந்துகொள்வதில் தல்லைவர் மிக ஆர்வமாய் இசைந்துள்ளார். வெட்டுகின்ற கேக்கில் பெரிய அளவாய் தர வேண்டும் என்று அவர் சொன்னதை இங்கு சொன்னால் எதிரிகள் அல்பம் என்று பெயர் வைத்துவிடுவார்கள் என்பதால் அந்த விஷயம் மாத்திரம் மூடி மறைக்கப்படுகிறது.

விழாநகரைச் சுற்றிலும் அக்கிலாண்ட நாயகனின் பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் அந்தப் பக்கம் செல்ல வேண்டாமென்று நகர காவல்துறையினரால் பொது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேனரைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம்.. கிழித்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல அலைமோதியது.

ராப் அக்காவின் தண்டர் படையினர் ரித்தீசுக்கு வெள்ளை எலி பாதுகாப்பு கொடுக்கப்படுமென்று உறுதி அளித்துள்ளனர்.

ராப் அக்காவின் பொறந்தநாளைக்கு பாராட்டி ரித்தீஷு பாடப்போற கவுஜ...

தமிழ்மணத்துல உன் பேரு ராப்பு
புரியாத கவுஜய பாடுனா அது பாப்பு
வாடிகன்ல இருக்காரு போப்பு
அவருக்கு எப்பவும் தேவைப்படாது சீப்பு

உன் கவுஜைக்கு தேவையில்ல கோனார் நோட்ஸ்
கடல் மேல ஓடுது பார் ஆயிரத்தெட்டு போட்ஸ்
தத்துவம்ன்னு சொன்னா அது நிறைய்ய தாட்ஸ்
பல்ப நீ கேட்டு வாங்கு எத்த்னை வாட்ஸ்

(இந்த இடத்தில் விசில் சப்தம் ஸ்பீக்கரை கிழிக்கும் என்று தண்டர் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.)

கும்ப்ளேக்கு கொடுத்தே ஒரு பாட்டு
கும்மியில நீ மீ த பர்ஸ்ட்டு
சண்டன்னா இங்கிலீசுல ஃபைட்டு
சமாதானம்தான் நமக்கு எப்பவும் ரைட்டு

பதிவுல நீ ராப் அக்கா
பதில் சொன்னா பீட்டருக்கா
தீவாளிக்கு தச்சேன் புது சொக்கா
எப்பவுமே உன் ப்ளான் பக்கா

Wednesday, December 10, 2008

நிமித்தக்குறிப்புகள் - 1

62 comments
எனக்கென விதிக்கப்பட்டு என்னுள் விதைக்கப்பட்ட
நிமித்தக்குறிப்புகளிட்ட சாத்தியங்களின்
திசையில் செல்கிறது எழுத்து..

நடுவே துண்டாகலாம்
தனித்து விடப்பட்டிருக்கலாம்
எவரேனும் ரசிக்கலாம்
அழிந்தும் போயிருக்கலாம்

ஆயினும்
கண்டுபிடிக்கத் தெரியுமுனக்கு,
இதுவும் உனக்கான கவிதையென்று!

Tuesday, December 09, 2008

அவளோட ராவுகளும்..அய்யனாரின் துரோகங்களும்..

60 comments


எனக்குப் பிடித்த மாற்று எழுத்துக்களின் சொந்தக்காரர்களில் ஒருவரான அய்யனாரைப் பற்றி இப்படி ஒரு பதிவிட சற்று மனதிற்கு கடினமாகத்தான் உள்ளது. ஆயினும் நான் உண்மையைத் தவிர வேறைதையும் சொல்வதில்லை என்ற மொக்கை கொள்கை கொண்டுவிட்டப் பிறகு இதை சொல்லாமல் இருப்பது தவறாகிவிடும் என்பதால் இந்த பதிவு...

துரோகம் நம்பர் 1

அவளோட ராவுகள் விமர்சனம் :

நடிப்பு : சோமன், பப்பு, ரவிக்குமார், சீமா

இயக்கம் : ஐ.வி. சசி

படத்தின் ஆரம்பம் சற்று அமைதியான மௌனத்தில் இருந்தாலும் மோகன்லால் வந்தபிறகு ஏதோ செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. ஆயினும் அவரும் அமைதியாக மலையாளம் பேசி ஒருவரை ஓட ஓட விரட்டி அடித்து ஆற்றில் போட்டு விட்டு மீண்டும் அமைதியை துணை கொண்டு சாயா குடிக்க ஆரம்பிக்கின்றார். ஐந்து நிமிட பொறுமை ஆறாவது நிமிடத்தை தொட அவசியமின்றி டிவிடியின் ஃபார்வெர்டு பட்டனின் துணை கொண்டு ஓட வைக்க மோகன்லால் நடக்கிறார். பாடுகிறார். ஓடிகிறார். அழுகிறார். முறைக்கிறார். எழுகிறார். அமர்கிறார். சிரிக்கிறார். மறுபடி பாட ஆரம்பிக்கிறார். ...றார்..றார்...றார்...றார்..

கடைசி வரைக்கும் நான் ஆசையோடு எதிர்பார்த்த அந்த ராவுக்காட்சி வரவேயில்லை.. வெறும் சாவுக்காட்சி மாத்திரம்தான் இருந்தது.

ஏன் அய்யனார் ஏன்..!?

நான் உங்களுக்கு செய்த கொடுமை என்ன...?

உங்களது பதிவுகளைப் படித்தது குற்றமா.. தவறாமல் போன் செய்து பதிவுகளுக்கான அர்த்தம் கேட்டது குற்றமா..

வரிசை தவறாமல் எல்லோரும் உங்களின் சில பதிவுகளை அலசி ஆராய்ந்து துவைத்து காய வைத்தபோது "நீங்க ரொம்ப நல்லவருங்க"ன்னு சொல்லி கூடவே தண்ணியடித்தது குற்றமா..

இல்லை உங்களிடமிருந்து கொண்டு சென்ற புத்தகங்களை படித்து முடித்ததும் பத்திரமாய் திருப்பி கொடுத்தது குற்றமா..

ஆசிப் அண்ணாச்சியுடன் என் அலுவலகத்திற்கு வந்தபோது அண்ணாச்சி, அய்யனாருடன் உங்களைப் பார்க்கும்போது அய்யனார் கலராய் இருக்கிறார் என்று சொன்னது குற்றமா..

சில படத்த பார்க்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்டான்னு என்கிட்ட சொல்லியிருந்தீங்க.. ஆனால் ஜப்பானின் அகிரோ குரோசோவா முதல் இங்க்மர் வரை குடுத்தும் சல்மா ஹெய்க்கை பற்றி விவரித்தும் ஹிட்ச்க்காக்கின் ஒளியமைப்புகளை வியந்தும் கூறிவிட்டு அவளோட ராவுகளை மாத்திரம் மாத்திக் கொடுத்திட்டீங்களே.. ஏன்.. அய்யனார் ஏன்..

இப்பக்கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். ஆனால் நான் தொலைபேசியில் அவளோட ராவுகளை காண முடியவில்லை என்று சொன்னதற்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட கூறாமல் ஆமாண்டா.. அந்த சிடி கவர்ல வேற படம்தானே வச்சிருந்தேன் என்று இயல்பாக கூறி என் மனதை உடைத்ததற்கு நான் எங்கு சென்று அழ முடியும்.

துரோகம் நம்பர் 2

அய்யனாருடன் பேசிக்கொண்டிருந்தபோது "அய்ஸ் உங்களவுக்கு எழுத்துல வீரியம் வர மாட்டேங்குதே.. என்ன செய்யறது எப்படி எழுதணும்."

அய்யனார், "அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. தண்ணியடிச்சுட்டு போதையில டைப் அடிக்க ஆரம்பி. வார்த்தைங்க தானா வந்து கொட்டும் அத அப்படியே போட்டுடு. இதெல்லாம் சகஜம்டா"

சரியென்று நம்பி துணைக்கு ஒரு ஜீவனை பக்கத்தில் வைத்துக்கொண்டு போதை ஏற்றிக்கொண்டு பேசிக்கொண்டு சினிமா பார்த்துக்கொண்டு அந்த ஜீவன் உறங்கியதும் கம்ப்யூட்டர் அருகில் வந்து சிகரெட் பற்றவைத்துக் கொண்டு யோசனைக்கு சிறிதும் இடம் தராமல் டைப் அடிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம் டைப் அடித்தேன் என்று தெரியவில்லை.

தட்டச்சிடும் சப்தம் கேட்டு தூக்கம் கெட்ட கண்களுடன் எழுந்த அந்த ஜீவன் அருகில் வந்து, "என்னடா செய்ற.. இந்த நேரத்துல"

"அய்ஸ் சொல்லியிருக்குது. தண்ணியடிச்சுட்டு பதிவு போட்டா வார்த்தைங்க எல்லாம் கோபமா வீரியமா போதையோட இருக்குமாம். அதான்"

அதற்கு அந்த ஜீவன், "டேய் எளவெடுத்தவனே! உன் கூட இதே தொல்லையாப் போச்சுடா.. கம்ப்யூட்டர ஆன் செஞ்சுத்தொலைடா @#$%$#@#$""

என்னக் கொடும அய்யனார் இது...

ஏன் எனக்கு மாத்திரம் இப்படில்லாம் நடக்குது...

Friday, December 05, 2008

நான் என்னும் தனிமைச்சொல்

112 comments

என்னிடம்
எதுவும் தனியே
கிடைப்பதில்லை
உண்மை
ஒரு பொய்யோடும்
மனது
கொஞ்சம் காயங்களோடும்
காதல்
சில தோல்விகளோடும்
தனிமை
பல பிரியங்களோடும்......
ஆயினும்
நான் இன்னும்
தனிமையில் உள்ளேன்!

Tuesday, December 02, 2008

மீச்சிறு பிடிவாதங்கள்...!

242 comments

சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
===============================


விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல்
==========================================


என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்

=============================================



விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்
===================================================



மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க

Monday, December 01, 2008

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில..!

32 comments
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
--------------------------------------------------------------ஆத்மாநாம்

அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
--------------------------------------------------------------சுகுமாரன்

என் பார்வையைப் பறித்து சூடிக்
கொண்டுபோனது ஒரு காட்சி
காக்கி உடையில் ஒரு பெண் போலீஸ்
பஸ்ஸுக்கு காத்திருந்தாள் தன்
கைக் குழந்தை தோள் சாய்த்து!
------------------------------------------------------------- பாதசாரி

மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து
கொண்டிருக்கிறது
------------------------------------------------------------தேவதச்சன்

வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-------------------------------------------------------------ஷண்முக சுப்பையா

நீலத்தை சூடிக்கொண்டடது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்துகொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.
---------------------------------------------------------------------விக்ரமாதித்யன்

ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்
--------------------------------------------------------------------------ஸ்ரீநேசன்

அலைகளைச் சொல்லி...
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
-------------------------------------------------------------------------நகுலன்

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி. டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை
--------------------------------------------------------------------முகுந்த் நாகராஜன்

ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
------------------------------------------------------------------பாலைநிலவன்

நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்
--------------------------------------------------------------பி. ராமன்

எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சை செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கணியில்!
---------------------------------------------------------தென்றல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-------------------------------------------------------நா.விச்வநாதன்

வீட்டின் கதவைத் தட்டுகிறது
எப்பொழுதும்
ஒரு பகல்
யாவரும் வெளிக்கிளம்பினர்
எனது தந்தை அலுவலகத்திற்கு
சகோதரி கல்லூரிக்கு
அம்மா சமையலறைக்கு
நானும் வெளிக்கிளம்பினேன்
நண்பகலோடு.
--------------------------------------------------------அப்பாஸ்

கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
-------------------------------------------------------கல்யாண்ஜி

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்
-------------------------------------------------------வண்ணநிலவன்

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
---------------------------------------------------கலாப்ரியா

அவன் மலை மீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கும் வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து
கடந்துவிட்டது.
-----------------------------------------------------ராணி திலக்

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப் போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி?
-----------------------------------------------------------பிரெய்ன் டர்னர் (தமிழில்: எஸ். பாபு)

நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
---------------------------------------------------------------------கல்யாண்ஜி

கவிதைகள் அனைத்தும் எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி"யின் அத்தியாய தொகுப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com